'மருகல்' என்பது ஒருவகை கல்வாழை. இது இக்கோயிலின் தலவிருட்சமாக உள்ளதால் ஊரும் இப்பெயர் பெற்றது. இப்பகுதியை ஆண்ட குசகேது மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கி, பஞ்சம் நீங்க சுவாமி இரத்தின மழை பொழிந்ததால் இப்பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.
மூலவர் 'மாணிக்கவண்ணர்', 'இரத்தினகிரீஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், சற்று அளவு குறைந்த பாணம், சதுர வடிவ ஆவுடையுடன், பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகைக்கு 'வண்டுவார்குழலி', 'ஆமோதள நாயகி' என்னும் திருநாமங்களுடன் காட்சி தருகின்றாள்.
கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். பிரகாரத்தில் பிரதான விநாயகர், சுப்ரமண்யர், மகாலட்சுமி, பராசர முனிவர் வழிபட்ட லிங்கம், நவக்கிரங்கள், பைரவர், சூரியன், சந்திரன், நாகர், செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை, திருஞானசம்பந்தர், சோமாஸ்கந்த மூர்த்தி, சாஸ்தா, சப்தமாதர், சனீஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். மருகலுடையார், சவுந்தர்ய நாயகி சன்னதிகளும் உள்ளன.
ஒருசமயம் இப்பகுதியில் வசித்து அம்மன் பக்தை ஒருவர் கர்ப்பமுற்றிருந்தாள். ஒருநாள் இரவு அப்பெண்ணுக்கு பிரசவ வலி எடுக்க, அச்சமயம் மழை பெய்ததால் வெளியில் சென்றிருந்த அவரது தாயார் ஆற்றின் அக்கரையில் மாட்டிக் கொண்டார். அதனால் அம்பிகையே அப்பெண்ணின் தாயார் வடிவத்தில் வந்து பிரசவம் பார்த்தாள். சூல் - கரு. அதனால் இங்குள்ள சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள திருமருகல், திருப்புகலூர், இராமனதீஸ்வரம் மற்றும் இத்தலத்தில் உள்ள அம்மனுக்கும் 'சூலிகாம்பாள்' என்னும் திருநாமம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது பிரசவம் பார்த்து இரவு தாமதமாகச் சென்றதால் அம்பாள் உள்ளே செல்லாமல் வெளியிலேயே நின்று விட்டாள். அதனால் இந்த நான்கு கோயிலிலும் அம்மன் சன்னதி வெளியிலேயே உள்ளது. எனவே, அர்த்தஜாம பூஜையின்போது அம்பிகைக்கு சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாதம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
சோழ மன்னன் ஒருவனின் சுரத்தைப் போக்கியதால் தல விநாயகர் 'சுரம் தீர்த்த விநாயகர்' என்று அழைக்கப்படுகின்றார்.
ஒருசமயம் மகாவிஷ்ணுவை விட்டுப் பிரிந்து பூவுலகம் சென்ற மகாலட்சுமி இத்தலம் வந்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி மாணிக்கவண்ணரை வழிபட்டு வந்தாள். பின்னர் மகாவிஷ்ணு அவர்முன் தோன்றி அவரை ஏற்றுக் கொண்டார். மகாலட்சுமி உண்டாக்கிய இத்தீர்த்தமே கோயில் எதிரில் அமைந்துள்ள லட்சுமி தீர்த்தம். இது மாணிக்கத் தீர்த்தம் என்றும் அழைக்கப்படும்.
பாம்பு கடித்து இறந்த செட்டி மகனை திருஞானசம்பந்தர் 'விடந்தீர்த்த பதிகம்' பாடி உயிர்ப்பித்து எழுப்பிய தலம். இங்குள்ள வன்னி மரத்தடியில் இருவருக்கும் திருமணமும் செய்து வைத்தார். அதனால் இத்தலம் 'விஷம் தீண்டாப்பதி' என்று அழைக்கப்படுகிறது. அம்மன் சன்னதிக்கு எதிர்த் தெருவில் தான் செட்டிப்பெண்ணும், செட்டிப்பிள்ளையும் தங்கியிருந்த மடம் இருந்தது. அங்கு உள்ள விநாயகர் 'நஞ்சு தீர்த்த விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார்.
சித்திரை மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் ஏழாம் நாளன்று செட்டிப்பெண் கல்யாண விழா நடைபெறுகிறது. இவர்கள் திருமணம் நடைபெற்ற மண்டபம் ஒன்று உள்ளது. பத்தாம் நாள் தீர்த்தவாரி விஷேசம். இக்கோயிலில் மற்றொரு சிறப்பான திருவிழாவாக ஆவணி மாதத்தில் வருகின்ற வரலட்சுமி விரதத்தன்று மகாலட்சுமியும், வரதராஜப் பெருமாளும் தாமரை வாகனத்தில் இலட்சுமி தீர்த்தத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பார்கள்.
கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று.
திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|